Published : 13 Oct 2022 06:54 AM
Last Updated : 13 Oct 2022 06:54 AM
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பசுமைவழிச் சாலையிலிருந்து அடையாறு ஆற்றின் கீழ் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதைஅடையாறு சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில்நிலையம் தற்போது உள்ள அடையாறு பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிக்கு இடையூறாக இருக்கும் அடையாறு பாலத்தின் மேல் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் பாலத்தின் இடது பகுதியை இடித்து அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணியின்போது, பசுமைவழிச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக, அடையாறு சந்திப்பு அருகில் புதிய இரும்பு பாலம் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்காலிகமான பாலமாக இருக்கும். இதுதவிர, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே நடக்கும் பணிகளுக்கு இடையேமஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் மற்றும் மாதவரம்-சோழிங்கநல்லூர்இடையே சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைகளில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த 4 பாலங்கள் கான்கிரீட் பாலங்கள். இவை நிரந்தரமான பாலமாக இருக்கும். இந்தப் பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகு, இந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT