

சென்னை: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தென் மண்டலப் பிரிவு சார்பில் கல்வி மாநாடு- 4.0, 'வேலைகள் மற்றும் திறன்களில் எதிர்கால முதலீடு' என்ற தலைப்பில் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
கல்வி சார் செயல்பாடுகளுக்கு மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொழில் துறை, கல்வித் துறை, தொழில்முனைவோர் இடையே உறவைப் பலப்படுத்தும் விதமாகவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை அதிகமாகக் காணப்படுகிறது. அதை ‘நான் முதல்வன்’ திட்டம் நிவர்த்தி செய்யும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாறுவதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தும். அதற்கேற்ப கல்லூரிகளில் படிக்கும் காலங்களிலேயே தொழில் வளர்ச்சி, வேலைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல், தொழிற்சாலைகள் தங்களுக்கு அருகே உள்ள கல்லூரிகளுடன் நல்ல தொடர்பை வைத்துக்கொள்ள முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் தொழில் நிறுவனங்கள் ஆர்வமுடன் முன்வந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். இதற்கு கல்லூரிகளும் பக்கபலமாகச் செயல்பட வேண்டும். கல்வி மற்றும் தொழில் துறை இணைந்து செயல்பட்டால்தான் சிறந்த வளர்ச்சியை நம்மால் விரைவில் அடைய முடியும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சிஐஐ தென்மண்டலத் தலைவர் நந்தினி ரங்கசுவாமி, இணைத் தலைவர் பி.பத்மகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.