

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தமிழகத்தில் சமூகப் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை என்பதை இது அழுத்தமாக உணர்த்தியுள்ளது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த பிற கட்சிகள், இயக்கங்களுக்கும், கலந்துகொண்ட பொதுமக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் 33 அரசியல் கட்சிகள், 44 இதர இயக்கங்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக ஒன்று குவிந்தன என்பது புதிய வரலாறு. பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்ட அரசியல் பார்வையும், மதவெறி அரசியலுக்கு எதிரான போக்கும் கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு, இந்த அறப்போரில் நிகழ்ந்த அணிதிரட்சி ஒரு சான்று. இங்கு மதம், சாதி, மொழியின் பெயரால் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி, வன்முறை வெறியாட்டத்துக்கு களம் அமைக்கின்றனர். அத்தகைய சனாதன சூழ்ச்சிகளுக்கு இங்கு இடமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதாகவே இந்த மனிதச் சங்கிலிஅறப்போர் அமைந்தது. இதே அரசியல் விழிப்புணர்வோடும், சமூகப் பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம். சமூகப் பிரிவினைவாதிகளிடம் இருந்து நம் தமிழ் மண்ணை பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.