

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிச லுக்கு தீர்வு காணும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முதல்கட்டம் மற்றும் முதல்கட்ட நீட்டிப்பு திட்டத்துக்கு பிறகு, விமான நிலையம் -விம்கோ நகர், பரங்கிமலை–சென்னை சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், 28 ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியை வழக்கமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவர்கள், வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
தற்போது, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால், பயணிகள் தவிக்கின்றனர். ஆலந்தூர் மற்றும் மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, அண்ணா நகர் கிழக்கு, விம்கோ நகர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை, அருகே உள்ள சாலைகளில் நிறுத்திச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும் விதமாக, விரிவாக்கம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "சில மெட்ரோ நிலையங்களில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் இட நெருக்கடி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றனர். இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தப் பகுதிகளில் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருக்கும் 120 வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்துச் செல்லுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.