

சென்னை: அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 7 அரசுமற்றும் 14 உதவி பெறும் பிஎட்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பிஎட்) படிப்புகளுக்கு 2,040 இடங்கள் உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பிஎட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்தக் கலந்தாய்வை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிரியர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்லெட், நெட் தேர்வு மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருந்தால் மட்டுமே உதவிப் பேராசிரியராக நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. தற்போது கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் 5,303 பேரில் 3,391 பேர் மட்டுமே யுஜிசி தகுதி பெற்றுள்ளனர்.
4 ஆயிரம் பேர் தேர்வு: இதற்கிடையே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்கட்டமாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் இந்தாண்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 2007 முதல் 2015-ம் ஆண்டு வரை 4,654 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இதுதவிர, மீதமுள்ள ஆசிரியர் காலி பணியிடங்களில் யுஜிசியின் தகுதியை அடிப்படையாக வைத்து கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று இடமாறுதல் கலந்தாய்வு நவம்பர் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என்றார்.