

வேலூர்: வேலூர் மாநகரில் இயக் கப்படும் அனுமதி பெற்ற ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை போக்குவரத்து காவல் பிரிவினர் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் அனுமதி பெறாமல் இயக்கப்படும் வெளியூர் ஆட்டோக்களை சுலபமாக கண்டறிய முடியும் என எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
வேலூர் மாநகரில் உள்ள சிஎம்சி, விஐடி, பொற்கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகம் செல்வதால் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. மாநகரில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்டோக்கள் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த ஆட்டோக்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையில், வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் களின் செயல்பாடுகளை கண்காணிக்க காவல் துறையினர் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வெளியூர் ஆட்டோக்கள் இயக்கப் படுவதால் ஏற்படும் சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு பெற்ற ஆட்டோக்களுக்கு தனி ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, வேலூர் மற்றும் காட்பாடி உட்கோட்டத்தில் உள்ள 59 ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்களின் விவரங்கள் முழுவதையும் போக்குவரத்து காவல் துறையினர் திரட்டியுள்ளனர். இதில், ஆட்டோவின் உரிமையாளர், வாகன பதிவெண், இயக்குவதற்கான அனுமதி எண், வாகன உரிமையாளரின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஆட்டோக்களின் உள்ளேயும், வெளியேயும்பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘வேலூர் மற்றும் காட்பாடியில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு மட்டும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர் இல்லாத ஆட்டோக்கள் இயக்கப்படும்போது சுலபமாக கண்டுபிடிக்க முடியும். அவர்களை நிறுத்தி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டிக்கர் இருக்கும் ஆட்டோக்களில் விவரங்களை பயணிகள் எளிதாக அடையாளம் கண்டு தவறு ஏதாவது நிகழ்ந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியும்’’ என்றார்.