Published : 12 Oct 2022 08:10 PM
Last Updated : 12 Oct 2022 08:10 PM

மருத்துவ சிகிச்சைக்காகப் போராடும் தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியர்: தமிழக அரசு நேசக்கரம் நீட்டுமா?

செவிலியர் அன்பு ரூபி

மதுரை: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியரான அன்பு ரூபி, மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி வருகிறார். தமிழக அரசு அவருக்கு நேசக்கரம் நீட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருநங்கை அன்பு ரூபியை, அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றவர்.

தமிழக அரசின் மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட (medical service recuritment bord) தேர்வில் வெற்றிப்பெற்று தொகுப்பூதியம் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பணிநியமனம் பெற்றவர்.

திருநங்கைகள் என்றாலே ஏளனமாக பார்க்கும் இந்த சமூகத்தின் கேலி கிண்டலுக்கு மத்தியில் படித்து வளர்ந்து இந்த சாதனையை அன்பு ரூபி எட்டிப்பிடித்தார். இவரின் விடா முயற்சியையும், ஆர்வத்தையும் பார்த்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் பாராட்டு தெரிவித்ததோடு, அன்பு ரூபியின் சொந்த மாவட்டத்திலேயே பணிநியனம் வழங்கினர்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் மூன்றாம் பாலினம் என்பது ஒரு தடையில்லை என்பதை அன்பு ரூபியின் இந்த பணி நியமனம், அவரைப்போல் படித்துக் கொண்டிருக்கும் திருநங்கைளுக்கு நம்பிக்கையும், ஊக்கத்தையும் ஏற்பத்தியது. அரசு பணி பெற்றபோது அன்பு ரூபி, ‘‘திருநங்கைகள் பலருக்கு உடல்ரீதியான பிரச்னை உள்ளதை அறிந்தே நான் நர்சிங் பயிற்சி பெற்றேன். சிகிச்சை பெற வசதியில்லாத ஏழைகள் உடல் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவேன்’’ என்று கூறினார். ஆனால், தற்போது தனது மருத்துவ சிகிச்சைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

அன்பு ரூபி, ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். இதற்காக அவர் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தசை இருக்கம் ஏற்பட்டு தற்போது கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்.

தசை இருக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையை உடனடியாக அவர் செய்தாக வேண்டும். இந்த மாதிரி அறுவை சிகிச்சைகளை எல்லா இடங்களிலும் செய்ய முடியாது. சில அரசு மருத்துவமனைகளில் பாலின அறுவை சிகிச்சை நடந்தாலும், இதுபோன்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வது சிரமம். மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களிலும், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அங்கு சென்று சிகிச்சைப்பெற ரூ.15 லட்சம் வரை செலவாகும். அன்பு ரூபின் நிலமையும், பல்வேறு சமூக சிக்கல்களுக்கு மத்தியில் எட்டிப்பிடித்த அவரது சாதனையையும் கருத்தில் கொண்டு மும்பையில் ஒரு மருத்துவமனை ரூ.6 லட்சத்திற்கு அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்ய முன் வந்துள்ளது.

தற்போது அன்பு ரூபி, தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். மேலும், அவர் தொகுப்பூதியத்தில் குறைந்தப்பட்ச ஊதியமே பெறுகிறார். அந்த தொகை அவரது அன்றாட குடும்ப செலவினத்திற்கே போதுமானதாக உள்ளது. அந்த சிகிச்சை செய்வதற்கான பொருளாதார வசதி தற்போது அவரிடம் இல்லை.

குடும்பத்தில் இருந்து ஆதரவும் இல்லை. திருநங்கைகள் என்றாலே ஏளனமாகப் பார்க்கும் சமூகத்தின் மத்தியில் படிப்பில் சாதித்து சமுதாயத்தில் எல்லோரையும் போல் கவுவரமாக வாழ முயற்சி செய்து வருகிறார். அவரது வாழ்க்கையை அவர் வாழ்வதற்கு இந்த சிகிச்சையை உடனடியாக செய்தாக வேண்டிய நிலையில் உள்ளார். அவரது இந்த சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும், மேலும், தன்னுடைய தொகுப்பூதியம் பணியை நிரந்தரம் செய்யவும் அவர் எதிர்பார்க்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x