''தமிழ் தெரியாத அதிகாரி நியமனத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு'' - போராட்டம் நடத்திய என்எல்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு
புதுச்சேரி: தொழிலாளர் உதவி ஆணையராக தமிழ் பேசுபவரை நியமிக்கக்கோரி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தினார். சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கையை நிறைவேற்றாததால் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
நெய்வேலி என்எல்சி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை, அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.50,000 வழங்க வேண்டும். வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சீனியாரிட்டி பட்டியலில் விடுப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை, உடனடியாக சொசைட்டியில் இணைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக உதவி ஆணையர் ரமேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலர் சேகர், "கடந்த மே மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகே போராட்டம் நடத்தி துணை ஆணையரிடம் மனு தந்தோம். புதுச்சேரியிலுள்ள உதவி ஆணையர் அலுவலகத்துக்கு மனு அனுப்பிவிட்டதாகவும் ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தந்தனர். எனினும், நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்தினோம்.
வரும் 19ம் தேதி சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்எல்சியில் எங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பாக சொல்ல வந்தால் உதவி ஆணையருக்கு தமிழ் தெரியவில்லை. தொழிலாளர் சொல்லும் கோரிக்கைகளை கேட்கும் மொழி தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இதுவரை தமிழ் தெரிந்தோர்தான் இருந்தனர். அதை தொடரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
