‘கமல்ஹாசனை கேலி பேசுவதா?’ - அண்ணாமலை மீது மநீம ஆவேசம்

கமல்ஹாசன் | கோப்புப் படம்
கமல்ஹாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவர் உணரவேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சி காட்டமாக கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித் தள்ளலாமென்று பார்த்தால் அவர் பேசியது தலைவர் கமல்ஹாசனைப் பற்றி. ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக் குதற முனைந்திருக்கிறார்.

கமல்ஹாசன் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ்ஏஞ்சல் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார். கமல்ஹாசன் லாஸ் ஏஞ்சல் பயணத்தைப்பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது. அதே அமெரிக்கவில் போய் அரசியல் பேசும் இவர் தலைவர் கமல்ஹாசனை கேலி செய்கிறார்.

தன் சம்பாத்தியத்திற்கு ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடும் கமல்ஹாசனை, அரசியலில் சம்பாதிப்பவர்கள் கேலி பேசுவது புதிதல்ல. எனவே அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்பட காட்சி ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன், ஒரு வரலாற்று உண்மையை கூறினார். அதுவும் காஞ்சிப்பெரியவர் சொன்ன உண்மையை, சோ ஒத்துக்கொண்ட உண்மையை, அண்மையில், இவரது கட்சியிலிருக்கும் சுப்பிரமணியசாமி வழிமொழிந்த உண்மையைத்தான் கமல்ஹாசன் கூறினார்.

அதையெல்லாம் மறுக்க திராணியற்ற அண்ணாமலை, எங்கள் தலைவர் மீது பாய்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கெனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும். ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவலதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in