மழைநீர் வடிகால் | ஒப்பந்ததாரர்களின் பணிகளைக் கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: "அரசிடமிருந்து அனைத்து நிதிகளும் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுகிறது. குறிப்பாக பணி ஆணை வழங்கப்பட்டப்பின் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.12) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், "நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மிக முக்கியமான துறை. நகர்ப்புர குடிமை வசதிகளின் அனைத்து வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கும் இத்துறை பொறுப்பானது.

நமது மாநிலத்தில் 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தான் மாநிலத்தின் 50 விழுக்காடு மக்கள் தொகைக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றன. அவர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். நமது சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களை அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நகரங்களில் குப்பைகளை அகற்ற ஒரு பெரிய குழு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் திடக்கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அரசிடமிருந்து அனைத்து நிதிகளும் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுகிறது. குறிப்பாக பணி ஆணை வழங்கப்பட்டப்பின் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். அனைத்து அலுவலர்களும் இந்த தகவல் பலகைகளைப் பயன்படுத்தி பணிகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, பணியை எடுத்த ஒப்பந்தாரர்கள் விரைவாகவும், தரமாகவும் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in