Published : 12 Oct 2022 09:37 AM
Last Updated : 12 Oct 2022 09:37 AM

காவலர்களின் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல் நிலையங்களில் ‘மகிழ்ச்சி அலுவலர்கள்’ நியமனம்

கோவை

காவலர்களின் மனநல பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில், கோவை மாநகர காவல்நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர காவல் நிலையங்களில் தலா இரண்டு எஸ்ஹெச்ஓ (ஸ்டேஷன் ஹேப்பினஸ் ஆபிஸர்) என்ற ‘மகிழ்ச்சி அலுவலர்கள்’ தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் ஆணையரின் பிரதிநிதிகளாக செயல்படும் இவர்கள், காவலர்களுக்கு இடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு உதவியாக இருப்பர்.

இதற்கென பிரத்யேகப் பயிற்சி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

மேலும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், மக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், அந்த குற்றத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதற்காக தனி இடம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x