குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா? - நயன்தாரா, விக்னேஷிடம் விசாரணை நடத்த முடிவு

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா? - நயன்தாரா, விக்னேஷிடம் விசாரணை நடத்த முடிவு
Updated on
1 min read

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுள்ளனரா என்பதை கண்டறிய அவர்களிடம் விசாரணை நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி பதிவிட்டார். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கர்ப்பப்பை குறைபாடு, கரு கலைவது போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகைத் தாயை நாட முடியும். வாடகைத் தாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், திருமணம் முடிந்த 4 மாதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளதால், திருமணத்துக்கு முன்பே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர், வாடகைத் தாயை நாடினரா, விதிமுறைகளை மீறி நடந்துள்ளனரா என பல சர்ச்சைகள் எழுந்தன. இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேட்டபோது, “அவர்கள் விதிமுறைகளின்படி வாடகைத் தாய்மூலம் குழந்தைகளை பெற்றுள்ளனரா என்று மருத்துவம், ஊரகநலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) மூலம் விசாரிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில், இதுகுறித்து டிஎம்எஸ் அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவனை நேரில் வரவழைத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி டிஎம்எஸ் இயக்குநர் (பொறுப்பு) ஹரிசுந்தரியிடம் கேட்டபோது, “நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக விசாரிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுபற்றி விசாரித்து வருகிறோம். துறை செயலரிடம் கலந்துபேசி, ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். முறைப்படி விசாரணை நடைபெறும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in