

கோவை: கத்தி போடும் திருவிழா குறித்து தங்கள் மனம் புண்படும்படி பேசிய காரப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் தேவாங்கர் எழுச்சி இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பில், அதன் மாநில கவுரவ ஆலோசகர் வி.ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள், கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
குலக்கடவுள்: அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தேவாங்க செட்டியார் சமூக மக்கள் சுமார் 55 லட்சம் பேர் உள்ளனர். எங்கள் தொழில்கைத்தறி நெசவு ஆகும். எங்கள்சமுதாயத்துக்கு சவுடேஸ்வரியம்மன் குலக்கடவுள் ஆகும். சவுடேஸ்வரியம்மனுக்கு காலம், காலமாக விஜயதசமி தினத்தன்று எங்களது குலவழக்கப்படி, ஆண்கள் உடலில் கத்திபோட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த 5-ம் தேதி விஜயதசமி தினத்தன்று கத்தி போடும் திருவிழா மாநகரில் டவுன்ஹாலில் உள்ள பழைய சவுடேஸ்வரியம்மன் கோயில், தெப்பக்குளம் மைதானத்தில் உள்ள புதியசவுடேஸ்வரியம்மன் கோயில்,ஏ.கே.எஸ் நகர் சீரநாயக்கன்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி, காரமடை, இடையர்பாளையம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.
திரித்துக் கூறுவதா? - இந்நிலையில் கோவை மாவட்டம் சிறுமுகையைச் சார்ந்த காரப்பன், தேவாங்கர் சமுதாய மக்கள் விஜயதசமி தினத்தன்று நடத்தும் கத்தி போடும் திருவிழா பற்றியும் எங்களது சமுதாய மக்களைப் பற்றியும் எங்கள் பாரம்பரியம், கலாச்சாரம், குல மரபு, குல வழக்கம், வழிபாட்டு முறை ஆகியவற்றை கொச்சைப்படுத்துவது போல்நாளிதழில் பேட்டி அளித்துள்ளார். ஆன்மிகத்துக்கும் நெசவாளர்களுக்கும் தொடர்பே இல்லை எனக் கூறியுள்ளார். இது எங்களது குல வரலாற்றை திரித்துக் கூறுவதாகவும், எங்கள்குல நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, காரப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு அளிக்கும்போது, மாநில செயலாளர் எஸ்.நாகராஜ் சுப்ரமணி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மோகன்ராஜ், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பசுபதி, துணை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.