Published : 12 Nov 2016 01:30 PM
Last Updated : 12 Nov 2016 01:30 PM

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளில் இந்தி திணிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அறிவிப்பால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும், பரபரப்பையும் பயன்படுத்திக் கொண்டு புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் தாள்களில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000, ரூ.500 தாள்களில் வழக்கமாக இடம் பெறும் பன்னாட்டு எண் வடிவத்துடன், கூடுதலாக தேவநாகரி வடிவத்திலும் 2000, 500 ஆகிய எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை ரூபாய் தாள்களில் தேவநாகரி எண்கள் இடம்பெற்றதில்லை.

இப்போதுதான் முதல்முறையாக ரூபாய் தாள்களில் தேவநாகரி எண்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை; அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. மாறாக, எந்தவித முன்னறிவிப்புமின்றி மத்திய அரசே தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு முன்பு அரசு பயன்பாட்டில் எந்த எண் வடிவத்தை பயன்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்பு நிர்ணய அவையில் விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது தேவநாகரி எண்களுடன் இந்தி மொழிக்கு உள்ள தொடர்பு பற்றி கோவை மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் அங்கப்ப ராமலிங்க செட்டியார் தலைமையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததையடுத்து, அனைத்து பயன்பாடுகளுக்கும், குறிப்பாக வங்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகளுக்கு பன்னாட்டு எண் வடிவத்தை பயன்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 343 ஆவது பிரிவாக சேர்க்கப்பட்டது.

அதன்பின் 1955-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய அலுவல் மொழி ஆணையத்திற்கு, மத்திய அரசின் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக எந்த வகை எண்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 344ஆவது பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால், அலுவல் மொழி ஆணையம் இது தொடர்பாக எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. மாறாக மத்திய அமைச்சகங்களின் இந்தி வெளியீடுகளில் மட்டும் தேவை ஏற்பட்டால் தேவநாகரி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது.

அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் வரை தேவநாகரி எண்களை பயன்படுத்தக் கூடாது; அதன்பிறகு அந்த எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், நினைவுக்குத் தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளில் அத்தகைய சட்டம் எதுவும் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.2000, ரூ.500 தாள்களில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

அதுமட்டுமின்றி, புதிய தாள்களில் தூய்மை இந்தியா இலச்சினையை பதித்துள்ள மத்திய அரசு, அதில் 'தூய்மை இந்தியா -தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி' - என்ற முழக்கத்தை இந்தி மொழியில் மட்டும் இடம்பெறச் செய்திருக்கிறது. ரூபாய் தாள்களை வெளியிடுவது இந்திய ரிசர்வ் வங்கி தான் என்ற போதிலும், புதிய தாள்களை பொறுத்தவரை மத்திய அரசின் ஆதிக்கமே ஓங்கி நிற்கிறது. தூய்மை இந்தியா நல்ல திட்டம் தான் என்றாலும், அதனுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ரூபாய் தாள்களில் அதை இடம்பெறச் செய்திருப்பதே மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு சாட்சியாகும்.

இந்தி பேசாத மக்கள் மீது பல்வேறு வழிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயன்று தோல்வியடைந்த மத்திய அரசு, இப்போது ரூபாய் தாள்களின் மூலமாக இந்தியையும், தேவநாகரி வடிவ எண்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து இப்பிரச்சினையை கையில் எடுத்தாலோ மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது நிச்சயம். பணத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில் இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தால் ஏமாறப்போவது மத்திய அரசு தான்.

புதிய ரூபாய் தாள்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்பதால், அவற்றை அச்சிடுவதை நிறுத்தி, தேவநாகரி எழுத்துக்களும், தூய்மை இந்தியா இலச்சினையும் நீக்கப்பட்ட புதிய தாள்களை அச்சிட வேண்டும். அத்துடன் நாடு முழுவதும் தானிய பணம் வழங்கும் நிலையங்கள் இயங்காததால் பணத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x