

மலைவாழ் மக்கள் தரமான கல்வி பயிலும் வகையில், நாடு முழுவதும் 700 இடங்களில் புதிய பள்ளிகள் அமைக்கப்படும், என்று மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் பேசினார்.
சேலத்தை அடுத்த ஏற்காட்டில் உள்ள மலைக்கிராமமான பெரியகாடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை, மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் நேற்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது:
தாய்மொழியுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலத்தை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக மலைவாழ் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மலைவாழ் மக்களின் நலனுக்காக தனி அமைச்சகம் கொண்டு வரப்பட்டது.
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தினை பிரதமர் மோடி கொண்டு வந்து உழைத்தாலும், பிற கட்சி ஆளும் மாநிலங்களில் அனைவருக்கும் வீடு திட்டம் சரியாக செயல்படவில்லை. இதனால் இத்திட்டத்தின் இலக்கை 2024-ம் ஆண்டுக்கு உயர்த்தி இருக்கிறோம்.
மாதந்தோறும் எத்தனை பேருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள் சிறந்த கல்வி அறிவு பெறுவதற்காக 700 இடங்களில் தரமான பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 8 இடங்களில் மலைவாழ் மக்களுக்கான சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
20 ஆயிரம் பேருக்கு மேல் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களிலும், 50 சதவீதத்துக்கு மேல் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.