

பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படும் என்று சட்டசபையில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அவர் பேசும்போது, “அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தற்போது படித்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனவே டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.