

சென்னை: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கட்சிகள், 13-க்கு மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை 500 இடங்களில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைதியாக இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது.