

பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இரு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் தேர்வு நடைமுறையை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உயர் கல்வித்துறையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கூறிவரும் நிலையில், ஊழலில் தமிழகம் முதலிடத்தைப் பிடிப்பதற்கான அறிகுறிகள்தான் தெளிவாக தென்படுகின்றன.
அதிலும் குறிப்பாக உயர் கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 24 துறைகளில் காலியாக உள்ள 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த மாத இறுதியிலிருந்து நேர்காணல்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் சில பணியிடங்களுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த வார இறுதிக்குள் அனைத்து நடைமுறைகளும் நிறைவடைய உள்ளன. அதைத்தொடர்ந்து பணி நியமனங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 21 ஆம் தேதி ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 28 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 64 பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1976 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களிடம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதல் நேர்காணல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் சனிக்கிழமை காலை வரை நேர்காணல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அன்று மாலையே பணி நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஆட்சிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தமுள்ள 118 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையில் பெருமளவில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இரு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களால் அதிகாரபூர்வமற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் நேர்காணலுக்கு வந்தவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம் கொடுத்தால் பணி நியமனம் நிச்சயம் என பேரம் பேசுவதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். இரு பல்கலைக்கழகங்களிலுமே உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் , இணைப் பேராசிரியர் பணிக்கு ரூ.50 லட்சம், பேராசிரியர் பணிக்கு ரூ.60 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் தேர்வு முறைகளும் இக்குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன. பொதுவாக பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தேர்வு மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
இதில், ஆசிரியர் பணிக்கான விலையை செலுத்த ஒப்புக் கொண்டவர்கள் சரியாக தேர்வு எழுதாவிட்டாலும், அவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர் என்றும், அதற்காக பல்வேறு வழிகள் கடைபிடிக்கப்பட்டன என்றும் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ளவர்களே கூறுகின்றனர்.
உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகிய பணிகள் மிகவும் பொறுப்பானவை. கலை, அறிவியல் என எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆய்வு செய்து புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இவர்கள் தான். ஆனால், பேராசிரியர் பணிக்கான நேர்காணலை இரண்டே நிமிடங்களில் நடத்தி சாதனை படைத்திருக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வேறு ஏதேனும் பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகவது பணியாற்றியிருக்க வேண்டும்; குறைந்தது 10 ஆராய்ச்சிக் கட்டுரைகளையாவது எழுதி வெளியிட்டிருக்க வேண்டும். அத்தகைய கட்டுரைகளின் தலைப்புகளை படித்துப் பார்த்து பொருள் விளங்கிக் கொள்ளவே 15 நிமிடங்கள் ஆகும். அதேபோல், தேர்வுக்குழுவில் 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களில் பாதிப்பேர் வினா எழுப்பினாலே, அதற்கு பதிலளித்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும் எனும் போது, 2 நிமிடங்களில் நேர்காணலை நடத்தி முடித்திருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும்.
நேர்காணல் நடத்தும் தேர்வுக்குழுவினர் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் தகுதியையும் மதிப்பீடு செய்து எவரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அத்தகைய பரிந்துரைகள் எதுவுமின்றி, வெற்றுப் படிவத்தில் கையெழுத்திட்டு கொடுக்கும்படி தேர்வுக்குழு உறுப்பினர்களை இரு பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பணம் கொடுப்பவர்களுக்குத்தான் வேலை என்றால், பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிச்சயம் திறமையானவர்களாக இருக்க முடியாது. திறமையுள்ளவர்கள் நிச்சயம் பணம் கொடுத்து வேலைக்கு வரமாட்டார்கள். திறமை குறைந்தவர்களை பணியில் அமர்த்தும்போது கல்வித்தரம் நிச்சயம் குறையும். இந்தியாவை உயர் கல்விக்கான உலக மையமாக மாற்றப்போவதாக அறிவித்த ஜெயலலிதா, இத்தகைய வழிமுறைகளின் மூலம் தான் அதை சாதிக்கப் போகிறாரா? என்பதை விளக்க வேண்டும்.
ஆசிரியர் பணி நியமனங்களில் ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்றான கோவை பாரதியார் பல்கலைக்கழகம் விரைவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படவுள்ளது. ஆசிரியர் பணியிடங்களை விலைக்கு விற்று திறமையில்லாதவர்களை பணி நியமனம் செய்தால் தமிழக பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தை அல்ல, உள்ளூர் தரத்தைக் கூட எட்டிப் பிடிக்க முடியாது என்பதை அக்கறை கலந்த எச்சரிக்கையாகவே அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தமிழக ஆளுநர் தலையிட்டு, இரு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் தேர்வு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
எழுத்துத் தேர்வுக்காக பயன்படுத்தப்பட்ட விடைத்தாள்கள், நேர்காணல் மதிப்பீட்டு குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, ஒட்டுமொத்த ஆசிரியர் தேர்வு நடைமுறை குறித்தும் பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக கல்வியாளர்கள் அடங்கிய உயர்நிலைக்குழுவையும் அமைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.