Published : 11 Oct 2022 03:45 PM
Last Updated : 11 Oct 2022 03:45 PM

அலுவல் மொழி விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக அடுக்கும் பதில்கள்

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: "அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளில் இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்பது போன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதலமைச்சர் வெளியிடுவது முறையல்ல" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை வன்மையாக கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். எதற்காக அவர் கண்டித்துள்ளார்? ஏன் கண்டனம்? அவரின் குற்றச்சாட்டுகளும், நம் பதில்களும்:

> ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைகள் உள்ளதை ஏடுகள் சுட்டிக்காட்டியுள்ளன

நம் பதில்: தவறானது. ஏடுகள் சுட்டிக் காட்டுவதைக் கொண்டு முதல்வர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும்கூட. மேற்கண்ட கல்வி நிலையங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்?

> இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.

நம் பதில்: அதுபோன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதல்வர் வெளியிடுவது முறையல்ல.

> இந்தியை பொதுமொழியாக்க மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நம் பதில்: தவறு. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. அதாவது, தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது இந்த குழு. தமிழ் பயிற்று மொழியாக இருப்பதற்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்?

> மத்திய அரசுப்பணிக்கான போட்டி தேர்விலிருந்து ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையை முன்வைத்திருப்பது ஏன்?

நம் பதில்: இல்லை. ஆங்கில கட்டாயப் பாடத்தை மட்டுமே தேர்விலிருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இனி ஆங்கிலத்திற்குப் பதில் தமிழ் இடம்பெறும். இதை ஏன் முதல்வர் எதிர்க்கிறார்?

> நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை கட்டாயமாக்க முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்திய குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளை பேசுவோர் இரண்டாரந்தரக் குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக் கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்த வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேரெதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

நம் பதில்: தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு வருவது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றா? இந்தி பேசும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என, அதாவது தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயம் என பரிந்துரை செய்திருப்பது குற்றமா? அனைத்து மொழிகளையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்ற பார்வையுடனே இந்த பரிந்துரைகள் உள்ளபோது அதை எதிர்ப்பது தமிழுக்குச் செய்யும் துரோகம். இந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல்படியே இது. அதை ஏன் திமுக எதிர்க்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்.

அதேபோல் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நீதிமன்ற தீர்ப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும் என்றும் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது நம் நீண்ட நாள் கோரிக்கை தானே? மத்திய அரசு, மாநில அரசோடு இதுநாள் வரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி நம் தாய்மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பதேன்?

இதைதானே இவ்வளவு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தோம்? இதற்கு தானே பல்வேறு போராட்டங்கள்? இதற்கு தானே நாம் போராடினோம்? இப்போது நிறைவேற்றப்போகிற வேளையில் ஏன் எதிர்க்கிறீர்கள்? ஓ! இனி மொழி அரசியல் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடியாது என்ற அச்சமா? இது முறையா? தமிழுக்கு நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா முதல்வர் ஸ்டாலின் அவர்களே!" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் விவரம்: 'இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்' - முதல்வர் ஸ்டாலின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x