Published : 11 Oct 2022 06:19 AM
Last Updated : 11 Oct 2022 06:19 AM
சென்னை: இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் முன்பைவிட அதிகரித்திருப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் (ACJ) பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில் பன்னாட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பு வல்லுநர் கொலின் பெரேரா பங்கேற்று, புலனாய்வு மற்றும் கலவர செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஆசிய இதழியல் கல்லூரி மாணவர்களின் 'பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு' தயாரித்துள்ள 'பத்திரிகையாளர் பாதுகாப்பு கையேடு' வரைவு ஆகியவை தொடர்பான 'ட்விட்டர் ஸ்பேஸஸ்' விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விவாதத்தை குனால் மஜூம்தார் நெறிப்படுத்தினார். அதில் ‘இந்து' என்.ராம் பங்கேற்று பேசியதாவது: பயமின்றி பணியாற்ற வாய்ப்பு கொடுக்கும் நிறுவன பத்திரிகையாளர்கள், நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் சமூக மற்றும் அரசியல் பலம் கொண்டவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் பதியப்படும். அதற்கே அப்போது பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது அவமதிப்பு வழக்குகளுக்குப் பதிலாக, அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாகப் பத்திரிகையாளர்கள் மீது உபா சட்டம் பதியப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் எளிதில் பிணையில் வெளிவர முடியாது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும் காவல் துறை, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு முகமைகள் மூலமும் பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது அதனால், முன்பைவிட இப்போது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. எல்லோர் மீதும் தாக்குதல் நடத்துவதில்லை.
சிறுபான்மையினர் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகமாக நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். ஆசிய இதழியல் கல்லூரி தலைவர் சசிகுமார் பேசியதாவது: இளம் பத்திரிகையாளர்கள் தற்கால சட்டங்கள், விதிகளைத் தெரிந்து கொண்டு தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த கல்லூரியில் தனிப்பிரிவு உள்ளது. அது தொடர்பான பயிலரங்கங்களும் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. பத்திரிகையாளர் பாதுகாப்பு கையேட்டில், தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, இந்த ஆண்டு 8 பத்திரிகையாளர்களும், கடந்த ஆண்டு 7 பத்திரிகையாளர்கள் சிறை சென்றி ருப்பதாகவும், இந்த ஆண்டு 2 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்போது சமூக வலைத்தளம் மற்றும் வலைப்பூவில் பதிவிடும் பத்திரிகையாளர்களும் அதிகமாகி வருகின்றனர். அவர்களின் பதிவு அடிப்படையிலும் அவர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்படுகின்றனர். மணல் மாஃபியாக்கள் தொடர்பாகப் பேசுபவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரும் கொல்லப்படுகின்றனர். அதனால் பத்திரிகையாளர் தாக்குதல் தொடர்பான வரையறையை மேலும் விரிவாக்கி, தாக்கப்பட்டோர் விவரங்களை இந்த கையேட்டில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT