Published : 11 Oct 2022 01:21 PM
Last Updated : 11 Oct 2022 01:21 PM
சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருந்து இருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார இயக்குநர்கள், இனை இயக்குநர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்குப் பின்னர் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, " தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 96% இரண்டாம் தவணை 91% செலுத்தப்பட்டு உள்ளது.
அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில் கூடுதலாக காலம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை வைத்து இருந்தது. அதனால் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைக் கொண்டு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழகத்தில் தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. விரைவில் அவற்றை செலுத்தி முடிக்க வேண்டுமென என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றை எங்கு துவங்குவது என்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும். கடந்த 20 நாட்களில் 13,178 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்களுக்கு பரிசோதனை செய்யபட்டு உள்ளது.
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட மருந்துகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 32 மருந்து சேமிப்பு கிடங்குகளில் இருந்து இவை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 6 மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் என தலா 5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் குழந்தை பெற்றது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. டிஎம்எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருமுட்டை மற்றும் வாடகை தாய் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்ட பின்பு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதன் பிறகு தேவைப்பட்டால் சம்பந்தபட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT