

கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள ‘குட்டி காவலர்’ எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (அக்.12) தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குநரும், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் எஸ்.ராஜசேகரன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகிலேயே இந்தியாவில்தான் அதிக சாலைவிபத்துகளும், அதனால்அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இங்கு 3 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். நாட்டில் அதிக சாலைவிபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் முதல் மூன்று இடத்தில் தமிழகமும் உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக சாலைவிபத்துகள் நடக்கின்றன. எனவே, சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து விதிமீறல்களை தன்னிச்சையாக பதிவு செய்வதற்கான அதிநவீன கேமராக்கள் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளன.
மாநகர காவல்துறையுடன் இணைந்து அதிக சாலை விபத்துகள்நிகழும் 18 இடங்களை கண்டறிந்து, அதற்கான தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக 12 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்கள் உடையில் பொருத்திக்கொள்ளும் வகையில் 75 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாலை பாதுகாப்பில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த 25 கல்லூரிகளில் ‘உயிர் கிளப்’ தொடங்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வியைபள்ளி பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக சேர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாலையின் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவலர்களை நியமித்து வாகன ஓட்டிகளை கண்காணிப்பதும், ஒழுங்கு படுத்துவதும் கடினம். எனவே, தமிழக அரசுடன் இணைந்து, பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
இந்த திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகள் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். மேலும், ‘தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்’ என பெற்றோர்களிடம் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை குழந்தைகள் பெறுவார்கள்.
இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நாளை தொடங்கிவைக்கிறார். கோவை கொடிசியாவில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் நேரடியாக சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
இதுதவிர, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் உறுதிமொழியேற்க உள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்ஆணையர், மாநகராட்சிஆணையர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மண்டல இணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.