பழங்குடியின மக்களுக்கு வனத்தில் வாழும் உரிமை வேண்டும்: சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்
பழங்குடியின மக்கள் வனத்தில் வாழ வாய்ப்பளிக்கும் வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என தருமபுரியில் பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் நேற்று, தமிழ்நாடு பழங்குடி மக்கள்சங்க மாநிலக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபையின் தேசியக்குழு உறுப்பினர் பூபாலன் தலைமை வகித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பழங்குடி மக்கள் சங்கத்தின் சிறப்பு தலைவருமான நஞ்சப்பன், மாநிலச் செயலாளர் பரமசிவம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். கூட்டத்தில் பின்வரும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
2006-ம் ஆண்டு வன உரிமைச்சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை நிறைவேற்ற தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 2003-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி காட்டில் வாழும் உரிமை மற்றும்வன பொருட்கள் அனுபவம் முழுமையாக பழங்குடி மக்களுக்குஉள்ளது.
ஆனாலும், வனத்துறையினர் பழங்குடி மக்களை காட்டில் இருந்து விரட்டும் வகையில் செயல்படுவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்கள் பாதுகாப்பாக வசித்திட அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்.
சேலம் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்களின் 3,000 ஏக்கர் நிலம்ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. அதேபோல, கன்னியா குமரி மாவட்டத்தில் கானிகார பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 36 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர் வசம் உள்ளது.
அவற்றை மீட்டு உரியவர்களிடம் அரசு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
