ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கருத்தடை சாதனம்: அகற்றும்போது கவனக்குறைவா? - மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை

ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கருத்தடை சாதனம்: அகற்றும்போது கவனக்குறைவா? - மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காப்பர்-டி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அதை அகற்றுவதற்காக கடந்த செப். 26-ம் தேதி அதே மருத்துவமனைக்கு அந்த பெண் வந்துள்ளார். அங்கு அவருக்கு கருத்தடை சாதனம் நீக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்தவரை அங்கிருந்த மருத்துவர்களும் ஊழியர்களும் சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சிறுநீர் கழிக்கும்போது பஞ்சு ஒன்று வெளியேறியதாகவும் மருத்துவமனையில் கருத்தடை சாதனத்தை கவனக்குறைவாக அகற்றியதால்தான் பஞ்சு தங்கி உடல்நலம் பாதித்ததாகவும் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்து முறையிட்டுள்ளனர். கவனக்குறைவாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த தலைமை மருத்துவர் கைலாஷிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை நடத்துவார் என அப்போது அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமாரியிடம் கேட்டபோது காப்பர்-டி கருத்தடை சாதனத்தை பொருத்தும்போதோ அல்லது எடுக்கும்போதோ பஞ்சு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. எப்படி இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in