

வேலூர்: அமெரிக்க தேசிய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் சர்வதேச அளவிலான போட்டிக்கு விஐடி சென்னை வளாக மாணவர் குழுவினர் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவின் தேசிய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) ஆண்டுதோறும் மாணவர்களின் செயல் திறனை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி, ‘ஹியூமன் எக்ஸ்புளோரேஷன் ரோவர் சேலஞ்ச்-2023’ என்ற மாணவர் திறன் போட்டியில் பங்கேற்க உலகளவில் 800 முன்மொழிவுகள் வரப்பெற்றன. இதில்,தேர்வு செய்யப்பட்ட 61 முன்மொழிவுகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. விஐடி சென்னை வளாகத்தின் மோவிஸ் குழு மாணவர்களும் அடங்குவர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த மாணவர் குழுவினர் தானியங்கி ரோவரை வடிவமைக்க உள்ளனர். இந்த வடிவமைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை செய்யப்படவுள்ளது.
விஐடி சென்னை வளாக தானியங்கியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் 2 பேராசிரியர் குழு இணைந்து இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் ரிஷிகேஷ் நாயக் கூறும்போது, ‘‘தானியங்கி ரோவரை வடிவமைத்து போட்டியில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறோம். இந்த போட்டியில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் வகையிலான வடிவமைப்பை உருவாக்க உள்ளோம்’’ என்றார்.