

பழநி - ஒட்டன்சத்திரம் இடையே 18 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.172 கோடி வழங்கியுள்ளது.
பழநிக்கு விடுமுறை , விசேஷ நாட்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக, நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி, சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் - பழநி வரை 18 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு ரூ. 172.15 கோடி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, பொள்ளாச்சியில் இருந்து பழநி வரையும், திண்டுக்கல் காமலாபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரையும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதே போன்று, பழநி - ஒட்டன்சத்திரம் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு விரைவில் வந்து சேரலாம். இத்திட்டத்துக்காக, 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை 16.50 மீட்டராக அகலப்படுத்த உள்ளனர்.
மேலும் ஒட்டன்சத்திரம் முதல் பழநி வரை 13 இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதியுடன் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விரைவில் இத்திட்டத்துக்கு டெண்டர் அறிவித்து பணிகள் தொடங்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.