

தமிழ் மொழியின் ஆதிகால சரித்திரங்கள் முழுமையாக, முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என நீதிபதி ஆர்.மகாதேவன் பேசினார்.
மாநில ஜவுளித் துறை ஆணையர் மா.வள்ளலார் எழுதிய ‘திண்டுக்கல்லில் எழுதிய வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் இலக்கிய களம் நிர்வாக செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துச்சாமி பேசினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.மகாதேவன் நூலை வெளியிட முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: வரலாற்றின் மூலமே கடந்த கால பண்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடியும். மொழி, கலாச்சாரம், பண்பாட்டை அறிந்து கொள்ள இடம் சார்ந்த வரலாற்றை அறிவது அவசியம்.
சங்க இலக்கியங்கள் வாழ்வின் அனைத்து கூறுகளையும் பாடல்களாக தந்துள்ளன. ஆதி மொழியான தமிழ் மொழியின் ஆதி கால சரித்திரங்கள் முழுமையாக, முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படாததால் தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், கலாச்சாரத்துக்குமான பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட வில்லை என்றார். மாநில ஜவுளித் துறை ஆணையர் மா.வள்ளலார் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் வீ.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.