மதுரை | தோண்டிய சாலைகளை முறையாக மூடாதால் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

மதுரை | தோண்டிய சாலைகளை முறையாக மூடாதால் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு
Updated on
1 min read

மதுரையில் நேற்று அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் ரேஸ்கோர்ஸ் சாலை உட்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மழை நீர் தேங்காமல் இருக்கவும், சேறும், சதியுமான சாலையை சீரமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று காலை 7 மணி வரை மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 மணிக்கு பிறகு மழை நின்றதால் பள்ளிகளுக்கு விடுமுறை முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.

ஆனால் முக்கிய சாலைகளில் மழை நீர் வடியாமல் தெப்பம்போல் தேங்கி நின்றது. பள்ளம் இருப்பதே தெரியாததால் குழந்தைகள் பெற்றோருடன் பள்ளிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றபோது மிகுந்த சிரமம் அடைந்தனர்.

பாதாளச் சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்கு தோண்டிய சாலைகளை மாநகராட்சி தற்போது வரை சீரமைக்கவில்லை. அதனால், இந்த சாலைகளில் மழை நீரால் புதைகுழி போன்ற நிலை ஏற்பட்டது. இதில் வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி ஓட்டுநர்கள் திண்டாடினர்.

நகரச் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பள்ளிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு சென்றோர் அவதிக்குள்ளாகினர்.

மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் நேற்று காலை பெய்த மழைக்கு ஒரு மரம் முறிந்து நடை பயிற்சி செல்வோரின் பாதையில் விழுந்தது. அப்போது மழை பெய்ததால் அங்கு யாரும் இல்லை. இதேபோல் புதூர் சிப்காட் தொழிற்பேட்டை சாலையிலும் ஒரு பெரிய வேப்ப மரம் முறிந்து விழுந்தது.

மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் கால்வாய்களை தூர்வாரவும், சாலைகளில் மழை நீர் தேங்குவதைத் தடுக்கவும், தோண்டிய சாலைகளை சீரமைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதுதான் பருவ மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இன்னும் அடை மழை பெய்யத் தொடங்கினால் மதுரை நகர சாலைகளில் மழைக் காலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை அளவு (மி.மீ.ல்) வருமாறு: மதுரை மாவட்டத்தில் சராசரியாக நேற்று 36.14 மழை பெய்தது. தல்லாகுளம்-80, மதுரை வடக்கு-78, வாடிப்பட்டி-60, சிட்டம்பட்டி-47.20, மேட்டுப்பட்டி-48.20, வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி-62, இடையபட்டி-90, சிட்டம்பட்டி-47.20 மழை பதிவாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in