Published : 11 Oct 2022 04:40 AM
Last Updated : 11 Oct 2022 04:40 AM

திமுகவின் வாரிசு அரசியலை குறிப்பிடும் ஆளுநர் தமிழிசையே அரசியல் வாரிசுதான்: நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி

திமுகவின் வாரிசு அரசியலை குறிப்பிடும் ஆளுநர் தமிழிசையே அரசியல் வாரிசுதான் என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியதாவது: ‘சூப்பர் சி.எம்’ ஆக இருப்பதைபடிப்படியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை நிரூபணம் செய்கிறார். தற்போது ராஜ்நிவாஸில் மக்கள் குறைகேட்பை தொடங்கியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதன் மூலம் மக்களால் தேர்வான அரசை அவர் அவமதிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

முதுகில் குத்துகிறார்: கிரண்பேடி காலத்தில் உருவான நிலை இன்னும் தொடர்கிறது. கூட்டணி அரசில் பாஜக படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி என்.ஆர்.காங்கிரஸை டம்மியாக்குகிறது. இணக்கமாக இருப்பது போல் செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியின் முதுகில் குத்துகிறார்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சி செய்வதை வழக்கமாக்கியுள்ளனர். புதுச்சேரியில் அரசுடன் இணைந்து செயல்படுவதாக ஆளுநர் தமிழிசை நாடகமாடி இரட்டை ஆட்சி நடத்துகிறார்.

முதல்வர் ரங்கசாமியோ, ‘தனக்கு முதல்வர் நாற்காலி மட்டும் போதும்’ எனச் செயல்படுகிறார். ராஜ்நிவாஸில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வை தொடங்கியவுடனே கூட்டணியில் இருந்து முதல்வர் ரங்கசாமி வெளியே வர வேண்டாமா?ராஜ்நிவாஸில் மக்களை நேரடியாக சந்திப்பதை பாஜக ஏற்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

தெலங்கானாவில் தொடங்க முடியுமா?: புதுச்சேரியைப் போன்று தெலங்கானா ஆளுநர் மாளிகையில் மக்களை ஆளுநர் தமிழிசை சந்திக்கும் திராணி உள்ளதா?

புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகள் வர ரூ. 90 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக பாஜக எம்எல்ஏ குற்றம் சுமத்தியிருந்த சூழலில் அதற்கு உரிமம் தரப்பட்டுள்ளன.

ஆலை தொடங்க முதலில் தொழில்துறை பரிசீலிக்காமல் கலால்துறை உரிமம் தந்துள்ளது. அதன்பிறகு தொழில்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் அனுமதி பெற குறிப்பிட்டுள்ளன. மதுபான ஆலைகளுக்கு உரிமம் தந்துள்ளது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்.

மின்துறை தனியார்மய மாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் இதை ரத்து செய்வோம். திமுக தலைவராக தேர்வான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவரிடம் நேரில் வாழ்த்து சொல்ல நேரம் கேட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

‘திமுக வாரிசு அரசியலை நோக்கி செல்வதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளாரே! என்று கேட்டதற்கு, "முதலில் அவர் தன் முதுகை பார்க்க வேண்டும். அவர் அரசியலில் வாரிசு இல்லையா?" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x