

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இணையதள விளையாட்டுகளாலும் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்டு குடும்பத்தினர் அனாதையாக தவிக்கும் சம்பவங்கள் புதுச்சேரியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சென்ற முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம், "தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ததற்கு அரசுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது பற்றி புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பாதிக்கப்பட்டோர் இக்கோரிக்கையை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் தடை செய்வது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து பேசி விரைவில் முடிவு எடுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.