

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் 51-வது தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுகவின் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலியாக உள்ள மாவட்டங்களில், மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாகவும், நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பாகவும், கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் தொடக்கவிழா சிறப்புக் கூட்டங்களை அக்டோபர் 17, 19 மற்றும் 26-ஆகிய தேதிகளில் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், அக்டோபர் 17-ம் தேதியன்று நாமக்கல்லில் நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.