

சென்னை: "கோவையில் பள்ளியை சுத்தப்படுத்த வந்தவர்கள், அங்கிருந்து செல்வதற்கு முன் உறுதிமொழி எடுத்துச் சென்றுள்ளனர். இனிவரும் நாட்களில், இதுபோல நடக்காமல், கவனமாக இருக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோவையில் அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுக்கும் வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி, மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இருந்தாலும், நாங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இதுதொடர்பாக பேசியிருக்கிறோம்.
இதுதொடர்பாக அவர்கள், "சார், நாங்கள் பயிற்சிக்கெல்லாம் எதுவும் அனுமதியெல்லாம் வழங்கவில்லை. விடுமுறைக்குப் பின்னர், பள்ளித் தொடங்குவதால் பள்ளியை சுத்தப்படுத்தித் தருவதாக கூறி ஒரு குழுவினர் வந்தனர். நாங்களும் சுத்தம் செய்துதர அனுமதி வழங்கினோம். அந்தக் குழுவினர், சுத்தப்படுத்திவிட்டு செல்லுமுன், திடீரென ஒரு உறுதிமொழி எடுத்துவிட்டு அவர்கள் சென்றனர்" என்று கூறியுள்ளனர். இனி அவ்வாறு நடக்காதபடி பார்த்துக் கொள்வதாக, மாநகராட்சி ஆணையரும் கூறியிருக்கிறார்.
எந்தவொரு பள்ளி வளாகத்திலும், இதுபோன்ற பயிற்சிகளுக்கு அனுமதி வழங்குவது இல்லை. இது ஏற்கெனவே இருக்கிற உத்தரவுதான். கோவையில் பள்ளியை சுத்தப்படுத்த வந்தவர்கள், அங்கிருந்து செல்வதற்கு முன் உறுதிமொழி எடுத்துச் சென்றுள்ளனர். இனிவரும் நாட்களில், இதுபோல நடக்காமல், கவனமாக இருக்கவும் உத்தரவிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.