Published : 10 Oct 2022 03:08 PM
Last Updated : 10 Oct 2022 03:08 PM

தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்ற போதும், எஸ்எஸ்எல்சி சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டவருக்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பணிநியமனத்துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. பின்னர், அந்த சான்றிதழ்களை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி," சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி வழங்க மறுக்க முடியாது. மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனுதாரரை ஆய்வக உதவியாளராக நியமித்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x