

சென்னை: தமிழகத்தில் விரைவில் சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் துறை சார்பில்இந்திய மருத்துவ உளவியல் சங்கம் இணைந்து நடத்திய "மனநல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் உலகளாவிய முக்கியத்துவம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "கரோனா என்ற பேரிடர் 2019 இறுதியில் தொடங்கி தற்போது தான் அதன் தாக்கம் குறைந்துள்ளது. அதைவிட முக்கியமான ஒன்று மன உளைச்சல். தற்போது மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. மன உளைச்சல் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று கூறவே முடியாது. குழந்தைகளாக இருக்கும்போதே மன உளைச்சல் தொடங்கிவிடுகிறது. ஆனால் அதில் இருந்து மீண்டு வர வேண்டும்.
வாழ்க்கையை எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவார்களை தடுக்க மருத்துவ துறை சார்பில் மனம் என்ற திட்டம் தொடங்கி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருந்துவமனைகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தற்போது மனநல பயிற்சி வழங்கி வருகிறோம். பயிற்சி முடித்த பின் அவர்கள் மற்ற கல்லூரிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்குவார்கள். தற்கொலை எண்ணம் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால், முடிவு தற்கொலையாகத் தான் இருக்கும். தற்கொலை என்ற எண்ணமே வரவிடக் கூடாது.
சாணிபவுடர், எலி மருத்து பயன்படுத்திதான் நிறைய பேர் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். இதை இரண்டையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் சாணிபவுடர் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்படும். அதேபோல், எலி மருந்து தனியாக வாங்க வந்தால் கொடுக்கக் கூடாது என்றும் வெளியே தெரியும்படி விற்பனை செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டு இருக்கிறோம்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.