

சென்னை: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் முலாயம் சிங் யாதவ், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: " உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனவரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன். ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் முலாயம் சிங் அவர்கள். அவர் மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து வாடும், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாதி கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான டி.ஆர். பாலு மறைந்த முலாயம் சிங் யாதவ் அவர்களுக்கு, திமுக சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்: " முலாயம் சிங் யாதவை இழந்து வாடும், யாதவ் அகிலேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாதி கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நலனுக்காகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளின் சேவை என்றென்றும் நினைவில் நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: "சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கியவர். 2000-ஆவது ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் மறைந்த மத்திய அமைச்சர் இராஜேஷ் பைலட்டுடன் இணைந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க முன்மொழிந்தவர். எனது 33 ஆண்டு கால சமூகநீதி தோழர்.
அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் புதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் குடும்பத்தினருக்கும், சமாஜ்வாதி கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வைகோ: "உத்திரப்பிரதேச மாநில முதல்வராகவும், இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய முலாயம்சிங் யாதவ் அவர்கள் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும், ஜனநாயக நெறிமுறைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்ட முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் , குடும்பத்தினர், அவரது கட்சி தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முத்தரசன்: "சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் (83) இன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர், சோசலிச சிந்தனையாளர் ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயணன் போன்றவர்களின் வழிநின்று பொது வாழ்வில் ஈடுபட்டவர். சமூக சீர்த்திருந்த கொள்கைகளில் முற்போக்கு கண்ணோட்டம் கொண்டவர்.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டும் தலைவராக செயப்பட்டு வந்த முலாயம் சிங் யாதவ், வகுப்புவாத சக்திகளின் தீவிரத் தாக்குதலை எதிர்கொள்ளும் நேரத்தில் காலமானது ஜனநாயக இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும்
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: "சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்.
சமூக நீதியின் தூணாக திகழ்ந்த அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்: "நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
பல்வேறு பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.