3 தொகுதி தேர்தல்: ம.ந.கூட்டணி ஆதரவை கோர தேமுதிக முடிவு? - நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

3 தொகுதி தேர்தல்: ம.ந.கூட்டணி ஆதரவை கோர தேமுதிக முடிவு? - நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
Updated on
1 min read

தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.

நவம்பர் 19-ம் தேதி நடக்கவுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்தன. தேர்தல் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திடீரென அறிவித்தார். தஞ்சையில் அப்துல்லா சேட், திருப்பரங்குன்றத்தில் டி.தனபாண்டியன், அரவக்குறிச்சியில் எம்.முத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணி மற்றும் தமாகாவுடன் இணைந்து தேமுதிக போட்டி யிட்டது. படுதோல்வி அடைந்ததால் தேர் தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. எனினும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளின் போது ம.ந.கூட்டணி தலைவர்கள் நால்வரும் ஒன்றாக சென்று விஜயகாந்தை வாழ்த்தினர். இந்நிலையில், 3 தொகுதி தேர்தலுக்காக ம.ந.கூட்டணியிடம் ஆதரவு கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இது தொடர்பாக தேமுதிக மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இந்தத் தேர்தலில் ம.ந.கூட்டணி போட்டியிடவில்லை என்று அறிவித்துள் ளது. போட்டியிடும் ஆர்வத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ம.ந.கூட்டணியின் பெரும்பான்மை முடிவால் தனது முடிவை கைவிட்டு விட்டது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக களமிறங்கியுள்ளது. அந்த 2 கட்சிகளுக்கும் மாற்று சக்தியாக போட்டியிட வேண்டும் என்பதே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப் பாடாக இருந்தது. ஏற்கெனவே புதுக் கோட்டை இடைத்தேர்தலின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவை ஆதரித்தது. எனவே, மீண்டும் அவர்களின் ஆதரவை பெற திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளைக் கொண்ட தஞ்சை தொகுதியில் இடதுசாரிகளுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக ம.ந.கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் முதலில் பேசிவிட்டு, அதன்பின்னர் ம.ந.கூட்டணியிடம் ஆதரவு கேட்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தலைவர் ஆலோசித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in