Published : 10 Oct 2022 05:36 AM
Last Updated : 10 Oct 2022 05:36 AM

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு: 3 ஆண்டுகளில் உலகத் தரம் மிக்கதாக மாறும்

சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் ரயில் நிலைய மாதிரி படம்.

சென்னை

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.90 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம், 114 ஆண்டுகள் பழமையானது. அழகான கட்டமைப்புகளை கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கையாளும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதவிர, இந்த நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது.

இதை ஏற்று, நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

கடந்த மே 26-ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். இதையடுத்து, ஜூன் 8-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த மாதம் ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.734.90 கோடிமதிப்பில் மறுசீரமைப்பு செய்ய, ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு, சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பதிவில், ‘எழும்பூர் ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கான முதல் மைல்கல் எட்டப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ரூ.734.90 கோடி மதிப்பில் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையம், அடுத்த 3 ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டப் பணி 69,425 சதுரஅடி பரப்பில் நடைபெறும். புதிய கட்டிடங்கள், நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறைகள் ஆகியவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு, சூரியமின்சக்தி மூலமாக ரயில் நிலையத்தின் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் எழும்பூர் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றப்படும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x