மீண்டும் திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் ஒன்றியம் முதல் மாவட்டச் செயலர்கள் வரையிலான நிர்வாகிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுக்குழு கூடியதும், தலைவர், பொதுச் செயலர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலை அறிவித்த அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையராக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செயல்படுவார் என்றார்.

இதையடுத்து, 2,068 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிவுடன், திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். தொடர்ந்து,பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, தணிக்கைக் குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வா.வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர், தலைமை நிலைய முதன்மைச் செயலராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலர்களாக ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகியதால், காலியாக உள்ள துணைப் பொதுச் செயலர் பதவிக்கு, திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. பெயரையும் அறிவித்தார்.

பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சில சலசலப்புகளைத் தவிர, உட்கட்சித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. நம்மைவிடத் தகுதியானவர்கள் இல்லை என்பதால், இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளதாக கருதவேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில், சிலர் தொடரட்டும் என முடிவெடுத்தோம். இரக்கத்தால் கூட சிலருக்குப் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம். இதன் காரணமாகப் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. வாய்ப்பு பெறாதவர்கள் வருந்த வேண்டாம்.

புதிய நிர்வாகிகள், பொறுப்புக்கு வராத அனைவரையும் அரவணைத்து, அவர்கள் ஆலோசனைகளையும் பெற வேண்டும். சிலர் மற்ற நிர்வாகிகளோடு பேசிக் கொள்வதில்லை எனக் கேள்விப்படுகிறேன். இதைவிட பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும்.

எந்த ஒரு தனி மனிதரையும்விட, கட்சியும், கொள்கையும்தான் பெரிது. தமிழகத்தை திமுகதான் இனி நிரந்தரமாக ஆளப்போகிறது.

இரண்டு பக்கமும் அடி...

ஒரு பக்கம் திமுக தலைவர்; மறுபக்கம் தமிழக முதல்வர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல என் நிலை உள்ளது. இந்த சூழலில், நம்மவர்கள் யாரும் எந்த புதுப் பிரச்சினையையும் உருவாக்கிவிடக் கூடாதே என்ற நினைப்புடன்தான் தினமும் காலையில் கண்விழிக்கிறேன்.

பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறை காரணமாக, பழிகளுக்கும், ஏளனத்துக்கும் கட்சி உள்ளானது. தற்போது கழிப்பறை,படுக்கை அறையைத் தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது. ஒவ்வொருவரும் பயன்படுத்தும் சொற்கள் மிக முக்கியமானவை. எனவே, பொது மேடைகளில் மட்டுமின்றி, அடுத்தவரிடமும் எச்சரிக்கையாகப் பேசுங்கள். சொன்னதை வெட்டியும், ஒட்டியும் பரப்பிவிடுவார்கள். இதற்கு பதில்சொல்வதற்கே நேரம் சரியாகிவிடும். கொச்சைப்படுத்தி, குளிர்காயப் பார்ப்பவர்களுக்கு நம்மவர்கள் இடம் தரக்கூடாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in