Published : 10 Oct 2022 06:19 AM
Last Updated : 10 Oct 2022 06:19 AM

அப்பா இடத்தில் அண்ணன் ஸ்டாலின்: பொதுக்குழுவில் கனிமொழி உருக்கம்

திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்வான கனிமொழி, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வாழ்த்து பெற்றார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலர்கள் 5 பேரில், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மற்றொரு துணைப் பொதுச் செயலரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பதவி காலியாக இருந்தது.இதையடுத்து, திமுக மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை துணைப் பொதுச் செயலராக நியமித்துள்ளதாக நேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, பொதுக்குழுவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: திமுக தொடங்கப்பட்டபோது, பெரியாருக்கும் நமது தலைவர்களுக்கும் இருந்த சிறிய இடைவெளி, அண்ணாவுக்கு உறுத்தலாக இருந்தது. நாம் இயக்கத்தை நடத்தும்விதம் பெரியாரை ஆறுதல்படுத்தக்கூடியதாகவும், அவர் போற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார் அண்ணா. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்குதல், தமிழ்நாடு என்று பெயர் சூட்டுதல் உள்ளிட்டவை மூலம் பெரியார் பாராட்டக்கூடிய ஆட்சியாக அமைந்தது.

மேலும் கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்பட்டார். மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு,சமூக நீதி என எந்த விவகாரத்திலும், தனது பதவியே பறிபோனாலும், கொள்கைகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் உயர் கல்விக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை கருணாநிதி நிரூபித்துக் காட்டினார். அவருக்குப் பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாகிவிடும் என பலர் கூறினர்.

ஆனால், அந்த வெற்றிடத்தை ஆழிப்பேரலையாக நிரப்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர்பொறுப்பேற்ற பின்னர், கட்சியைதொடர்ந்து வெற்றிப் பாதையில்அழைத்துச் செல்கிறார். நம் வீட்டுப் பிள்ளைகள் படிப்பைப் பெற்று 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே, இங்கு உள்ள சனாதன சக்திகள், மறுபடியும் அவர்களை வீட்டுக்குஅனுப்ப முயற்சிக்கின்றன.

பெண்களுக்கு சம உரிமை உருவாக்கக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணனுக்கு முன் இருக்கும் போராட்டம், வெறும் அரசியல் வெற்றிக்கான போராட்டம் அல்ல. கொள்கைக்கான போராட்டம். பிள்ளைகளின் எதிர்காலம், சுயமரியாதைக்கான போராட்டம். அந்தப் போராட்டத்தில் அவருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அறிஞர் அண்ணா, அப்பாஇல்லாத இடத்தில், நான் உங்களைவைத்துப் பார்க்கிறேன். உங்கள்வழியிலேயே நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய போராட்டங்கள் அனைத்திலும் உங்கள் பின்னால்அணிவகுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கனிமொழி பேசினார்.

ஸ்டாலின் புகழாரம்: திமுகவின் உட்கட்சித் தேர்தல் முடிவுகளை மு.க.ஸ்டாலின் வாசித்தார். அப்போது துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராகக்கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும்போது, டெல்லியிலே ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழியான கனிமொழி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார் எனக் கூறினார். இது தொண்டர்கள், மகளிரணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நீங்கள் தேர்ந்தெடுக்கும்்போராட்டங்கள் அனைத்திலும் உங்கள் பின்னால் அணிவகுக்கத் தயாராக உள்ளேன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x