Published : 10 Oct 2022 06:49 AM
Last Updated : 10 Oct 2022 06:49 AM

திருவண்ணாமலையில் விடிய, விடிய லட்சக்கணக்கானோர் கிரிவலம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி திதி என்பதால், அதிகாலையில் இருந்து விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். திருவண்ணாமலையின் சிறப்பு கிரிவலம். ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ. வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வருகை, மாலை 4 மணிக்கு பிறகு கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் கிரிவலப் பாதையில் கடல் அலையாக பக்தர்கள் வலம் வந்தனர்.

அப்போது அவர்கள், ஓம் நமசிவாய, அண்ணாமலையாருக்கு அரோகரா என உச்சரித்து அண்ணாமலையாரை வணங்கினர். இன்று காலை வரை விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சீருடை அணியாத காவலர்கள், வழிப்பறி மற்றும் திருட்டு நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும், போக்குவரத்தை சரி செய்தனர். கிரிவலப் பாதையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

4 மணி நேரம் காத்திருப்பு: நீண்ட வரிசையில், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து, மூலவர் மற்றும் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விஐபி தரிசனம் வழக்கம்போல் நடைபெற்ற நிலையில், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் அஷ்டலிங்க கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. இக்கோயில்களிலும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x