Published : 10 Oct 2022 06:25 AM
Last Updated : 10 Oct 2022 06:25 AM

எய்ம்ஸ் மருத்துவமனை பணி 2026-க்குள் நிறைவடையும்: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தகவல்

தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேசினார். உடன் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர்.

தருமபுரி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தருமபுரியில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த ரூ.58 கோடியையும், கரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1.28 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தேசிய சுகாதாரத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.3,225 கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் அலுவலர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கரோனா தொற்று பரவல் காரணமாக தடைபட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை மறுமதிப்பீடு செய்து தற்போது, ரூ.1,977 கோடி நிதி ஒதுக்கிஉள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x