

அதிநவீன கருவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
அத்துடன் 450-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக நோயாளிகள் நலச்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் கூறியதாவது: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2010-ம் ஆண்டில் 140 படுக்கை வசதிகள் இருந்தன. அப்போது 27 மருத்துவர்கள் பணியாற்றினர். தற்போது 440 படுக்கை வசதிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 35 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதிலும் சில மருத்துவர்கள் விடுமுறை மற்றும்மாற்றுப் பணியில் சென்றுவிடுகின்றனர். 10 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் வீதம் 150 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களுக்கும் சேர்ந்து 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
தினசரி 2000 புறநோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் 12 மருந்தாளுனர்கள் இருக்க வேண்டும். தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களும் பிரேத பரிசோதனை பணிக்கு மருத்துவருடன் சென்று விடுவதால், நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எக்ஸ்ரே பிரிவில் லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 8 பேர்பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். அத்துடன் நரம்பியல், தோல் மருத்துவர்கள் இங்கு இல்லை.
காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் மாற்றுப் பணியில் சென்று விடுகிறார். சிடி ஸ்கேன் எடுப்பதற்குஆட்கள் உள்ளனர். ஆனால் அது குறித்து அறிக்கை கொடுப்பதற்கான மருத்துவர் இல்லை.
போதிய கட்டிட வசதிகள், அதிநவீன மருத்துவ கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பணியில் உள்ள மருத்துவர்கள் கூடுதல் பணிச் சுமையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, கூடுதல் மருத்துவர்களை நியமித்து பொதுமக்கள் மருத்துவ உதவி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நோயாளிகள் நலச்சங்க தலைவரும், பொள்ளாச்சி சார் ஆட்சியருமான தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ் நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் பேசும்போது, ‘‘மாவட்ட தலைமை மருத்துவமனை விதிகளின்படி 500 படுக்கைகளுக்கு 75 மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பதால், விரைவில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.