Published : 10 Oct 2022 06:37 AM
Last Updated : 10 Oct 2022 06:37 AM

மக்களைப் பாதுகாக்க காலநிலை அவசரநிலை பிரகடனம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்

காலநிலை செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ‘காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம்’ என்ற தலைப்பிலான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி எம்எல்ஏ, ஏ,கே,மூர்த்தி, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலநிலை மாற்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்ய அரசுகளை வலியுறுத்தியும் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று ‘சென்னை மாரத்தான் ஓட்டம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர.அருள், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அப்போது, அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுடைய நோக்கம் தமிழக அரசு, காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும். உடனடியாக காலநிலை அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும். இயற்கை சீற்றங்கள், வெப்பநிலை மாற்றம் நிகழ்கின்றன. ஒரு பக்கம் வறட்சியாகவும், ஒரு பக்கம் மழை வெள்ளத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த கால நிலை மாற்றம் குறித்து அனைவரிடமும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இன்னும் 8 ஆண்டுகளுக்குள் காலநிலை மாற்றம் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலகை காப்பாற்ற முடியாது என்று ஐ.நா. சபைஎச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்துக்கும், நீர் மேலாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிறைய மரங்களை நட வேண்டும். நாம் இருசக்கர வாகனம், கார்களில் அதிகம் பயணம் செய்து வருகிறோம். ஆனால் அதற்கு மாற்றாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்து, தீவிர நடவடிக்கை எடுத்தால்தான் நாம் மக்களைக் காப்பாற்ற முடியும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x