சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீஸார் புது வியூகம்: ‘ரெக்கார்டிங்’ டிவிக்களுடன் தனி கட்டுப்பாட்டு அறை- தொலைக்காட்சி செய்திகள் தானாக பதிவாகும்

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீஸார் புது வியூகம்: ‘ரெக்கார்டிங்’ டிவிக்களுடன் தனி கட்டுப்பாட்டு அறை- தொலைக்காட்சி செய்திகள் தானாக பதிவாகும்

Published on

சென்னையில் தொடர் கொலை களைத் தடுக்க பல்வேறு நட வடிக்கைகளில் போலீஸார் இறங்கியுள்ளனர். குற்றங்கள் தொடர்பாக தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தானாக பதிவு செய்து சேமிக்கும் வசதி கொண்ட ‘ரெக்கார்டிங்’ டிவிக்களுடன் புதிய பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறை தயாராகி வருகிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 9 கொலைகள் நடந்துள்ளன. திருவல்லிக்கேணி யில் கடந்த 27-ம் தேதி ரவுடி தயாநிதி, 29-ம் தேதி கண்ணகி நகரில் 3 பேர், 30-ம் தேதி வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ரவுடி பழனி, 31-ம் தேதி தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பங்களாவில் தனியாக வசித்த மூதாட்டி சாந்தி, கடந்த 2-ம் தேதி மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோயில் தெருவில், வீட்டில் தனியாக வசித்த பெண் வக்கீல் லட்சுமிசுதா உட்பட கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல் லப்பட்டுள்ளனர். பிற கொலைகளை முன்னரே கண்டறிந்து தடுப்பது கடினம். ஆனால், ரவுடிகள் மோதல், கொலையை காவல் துறை நினைத்திருந்தால் தடுத்தி ருக்கலாம் என்ற புகார் எழுந்தது.

இதையடுத்து, ரவுடிகள், பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், ஆவடி, அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணை யர்களுக்கு ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரவுடிகளின் பட்டியல் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நுண்ணறிவு போலீஸாரும் ரவுடிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு, அவர்கள் எந்தவகை குற்றச் செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவலையும் தனியாக சேகரித்து வருகின்றனர்.

முதியோர்களின் பட்டியல்

வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் பட்டியலும் சேகரிக் கப்பட்டு வருகிறது. அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய இது வசதியாக இருக்கும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

இதுபோக, சென்னையில் முக்கியமாக பெரிய அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவாறே நேரில் பார்க்க 10 லைவ் கேமராக்கள் சென்னை போலீஸாரிடம் உள்ளன. சம்பந் தப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் காவல் ஆணையர், போராட் டத்துக்கு தகுந்தவாறு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடுகிறார்.

தற்போது, மேலும் ஒரு முயற்சியாக சென்னை காவல் துறைக்கு 4 பிரம்மாண்ட ரெக்கார் டிங் டிவிக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் 8 செய்தி சேனல்களில் ஒளிபரப் பப்படும் செய்திகள் தானாகவே பதிவாகும். இதற்கென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 6-வது மாடியில் தனி கட்டுப்பாட்டு அறை ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடக்கின்றன.

ஏற்கெனவே, நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையில் இறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே, இந்த புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப் படுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in