

ராஜபாளையத்தில் குழாய் இணைப்பு இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.2,280 குடிநீர் வரி விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராஜபாளையம் நகராட்சியின் குடிதீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் 2018-ம் ஆண்டு ரூ.197.79 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.
பணிகள் முடிந்து குடிநீர் விநியோகம் தொடங்கப்படாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் குடிநீர் வரியை ரூ.50-ல் இருந்து ரூ.150 ஆக நகராட்சி நிர்வாகம் உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குடிநீர் வரி ரூ.50 குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜபாளையம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் உட்பட குடிநீர் இணைப்பு இல்லாத பல கட்டிடங்களுக்கு குடிநீர் வரி விதித்து நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்காமல் வரியை உயர்த்தி வசூலிக்கும் நிலையில், தற்போது இணைப்பே இல்லாத கட்டிடங்களுக்கு குடிநீர் வரி விதிக்கும் நகராட்சி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.