

கடந்த 2011-ல் நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எனக்காக பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலுவுக்கு பணம் வழங்கவில்லை என உயர் நீதிமன் றத்தில் நடந்த குறுக்கு விசாரணையின் போது மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலி்ன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நடந்து வருகிறது. தற்போது மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக நேற்று ஸ்டாலின் மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜரானார். சைதை துரைசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் மற்றும் வழக்கறிஞர் கே.சவுந்திரராஜன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது நடந்த கேள்வி பதில் விசாரணை வருமாறு:
கேள்வி: துணை முதல்வராக பதவியில் இருந்தபோது என்னென்ன துறைகள் உங்களிடம் இருந்தன?
நீதிபதி: வழக்கிற்கு தேவையற்ற கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டாம்.
கேள்வி: மகளிர் சுய உதவிக்குழு எதற்காக தொடங்கப்பட்டது. அதற்கான கருப்பொருள் என்ன? உங்கள் தொகுதியி்ல் எத்தனை குழுக்கள் உள்ளன.
ஸ்டாலின்: பெண்கள் தொழில் தொடங்குவதற்காகவும், அரசு நிதி வழங்குவதற்காகவும் தமிழகம் முழவதும் தொடங்கப்பட்டது. என் தொகுதியில் எத்தனை குழுக்கள் உள்ளன என்பது தெரியாது.
கேள்வி: கொளத்தூர் தொகுதியில் 203 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதா? இரவு 7 மணி நிலவரப்படி 18-வது சுற்று முடிவில் ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தீர்களா? அதன்பிறகு எண்ணிக்கை நடந்ததா?
ஸ்டாலின்: ஆம்.
கேள்வி: வீதி, வீதியாக சென்று பிரச் சாரம் செய்தீர்களா?. தெருமுனைக்கூட்டம் நடத்தினீர்களா?
ஸ்டாலின்: குறிப்பிட்ட வீதிகளுக்குத் தான் சென்றேன். வீடு வீடாக செல்ல வில்லை.
கேள்வி: கொளத்தூர் தொகுதியில் ஒட்டுமொத்த செலவையும் திமுக செய்ததா? அல்லது வேறு யாரும் செய்தார்களா?
ஸ்டாலின்: சரியாக ஞாபகமில்லை.
கேள்வி: தேர்தலில் பயன்படுத்திய டிஎன் 07 பிஎஸ் 2345 என்ற வாகனத்தைப் பயன்படுத்தினீர்களா? அது யாருடையது?
ஸ்டாலின்: ஆம். பயன்படுத்தினேன். ஆனால் அந்த கார் எனது மகனுடையது.
கேள்வி: தேர்தலில் பயன்படுத்திய ஜீப் மற்றும் ஆட்டோ உங்களுடையதா?
ஸ்டாலின்: ஜீப் நண்பருடையது. ஆட்டோ நிச்சயமாக என்னுடையது இல்லை.
கேள்வி: தேர்தலுக்காக உறவினர்கள், ஏஜென்டுகள் பிரச்சாரத்தின் போது செய்த செலவை தாக்கல் செய்துள்ளீர்களா?
ஸ்டாலின்: ஆமாம். தாக்கல் செய்துள்ளேன்.
கேள்வி: ‘முரசொலி’ திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழா?
ஸ்டாலின்: ஆம்.
கேள்வி: கடந்த 25.3.11 அன்றைய ‘முரசொலி’யில் கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என வெளியான செய்தி உண்மையா?
ஸ்டாலின்: ஆம். இதில் என்ன தவறு இருக்கிறது?
கேள்வி: உங்களுக்காக நடிகர் வடிவேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா? அதற்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டதா?
ஸ்டாலின்: ஆம். ஆனால் பணம் வழங்கப்படவில்லை.
கேள்வி: கொளத்தூர் தொகுதியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் யாரிடமாவது விசாரணை நடத்தினார்களா?
ஸ்டாலின்: தெரியாது.
கேள்வி: உங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்தீர்களா?
ஸ்டாலின்: முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான குற்றச்சாட்டுகள்.
கேள்வி: ஈஸ்வரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் குறித்த சிடி-யை பார்த்தீர்களா?
ஸ்டாலின்: இல்லை.
இவ்வாறு சுமார் 4 மணி நேரம் நடந்த குறுக்கு விசாரணைக்கு ஸ்டாலின் ஒற்றை வரியில் பதிலளித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி இன்று தள்ளி வைத்தார்.