

விவசாயிகளின் துயரங்களை உணர்ந்து அவற்றை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உலகத்துக்கே உணவு படைக்கும் கடவுள்கள் என்று போற்றப்படும் விவசாயிகள் வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தொடர்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது மிகுந்த அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அளிக்கிறது. ஈரோட்டிலும், வேதாரண்யத்திலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட 2 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பிரிஞ்சி மூலையைச் சேர்ந்த முருகையன் என்ற விவசாயி 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார். கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த நிலையில் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் வராததாலும், பருவமழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் கருகின.
இதனால் மனமுடைந்த விவசாயி முருகையன் திங்கட்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், ஈரோடு மாவட்டம் கரட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி கடன்வாங்கி மஞ்சள் பயிரிட்டிருந்தார். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மஞ்சள் பயிர் கருகத் தொடங்கியது. இதை தாங்கிக் கொள்ள முடியாத விவசாயி ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில வாரங்களாகவே வறட்சியால் பயிர்கள் கருகுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ், மன்னார்குடி அழகேசன், கீழத்திருப்பூந்திருத்தி ராஜேஷ்கண்ணா, வேதாரண்யம் ரத்தினவேல், கீழ்வேளூர் நவநீதம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளன. இதனால் அவர்களின் குடும்பங்கள் ஆதரவற்றவைகளாகி தவிக்கின்றன.
ஏற்கெனவே பலமுறை கூறியதைப் போல விவசாயிகளின் தற்கொலையாக இருந்தாலும், அதிர்ச்சி உயிரிழப்பாக இருந்தாலும் அதற்கு காரணம் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், அது குறித்த கவலையும்தான். பயிரைக் காக்க முடியாது என்ற நிலையில், கவலையை போக்குவதன் மூலம் மட்டும்தான் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதையும், அவர்களே ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதையும் தடுக்க முடியும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவது தான் இதற்கு ஒரே தீர்வாகும்.
பலமுறை வலியுறுத்தியும் இந்த கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. விவசாயிகளின் தற்கொலை தொடரும் நிலையில், அதை தடுக்க முயலாமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் போதிலும், விவசாயிகளின் துயரங்களை உணர்ந்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இனியும் உறங்காமல் காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.