Published : 22 Nov 2016 08:52 AM
Last Updated : 22 Nov 2016 08:52 AM

3 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி: புதுச்சேரி நெல்லித்தோப்பில் முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்

பாஜக, தேமுதிக, பாமக உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர்

*

தமிழகத்தில் தேர்தல் நடந்த அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக, திமுகவைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். புதுச்சேரியின் நெல்லித்தோப்பில், அந்த மாநில முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதி

களுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. அரவக்குறிச்சிக்கு கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், தஞ்சைக்கு குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றத்துக்கு மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. அரவக்குறிச்சியில் பாஜக, தேமுதிக வேட்பாளர்களுக்கு மையத்தில் இடம் ஒதுக்காத பிரச்சினையால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. 3 மையங்களிலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பார்வையாளர் முன்னிலையில், ஒவ்வொரு சுற்று முடிவும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே பார்வையாளரின் ஒப்புதல் பெற்று வெளியிடப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆளும் அதிமுக வெற்றி பெற்றது. அரவக்குறிச்சியில் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி 88,068 வாக்குகள் பெற்று, 23,661 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு 64,407 வாக்குகள் கிடைத்தன.

தஞ்சையில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 444 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமி, 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு ஒரு லட்சத்து 1,362 வாக்குகளும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு 74,488 வாக்குகளும் கிடைத்தன.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 3,098 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்,ஒரு லட்சத்து 13,032 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.சரவணனைவிட (70,362 வாக்குகள்) 42,670 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிமுகவினர் வெற்றியை கொண்டாடினர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில், அந்த மாநில முதல்வர் வி.நாராயணசாமி வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 26,898 வாக்குகளில் நாராயணசாமிக்கு 18,709 வாக்குகள் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் தனது முதல்வர் பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு 7,565 வாக்குகள் கிடைத்தன.

அரவக்குறிச்சியில் 39, தஞ்சையில் 14, திருப்பரங்குன்றத்தில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக தவிர பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

மூன்றாமிடத்தில் பாஜக

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை பாஜக பிடித்துள்ளது. அரவக்குறிச்சியில் பாஜகவின் பிரபு 3,162 வாக்குகளும், தஞ்சையில் எம்.எஸ்.ராமலிங்கம் 3,806 வாக்குகளும், திருப்பரங்குன்றத்தில் ஆர்.சீனிவாசன் 6,930 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அரவக்குறிச்சி (1,538), தஞ்சையில் (2,295) நோட்டா 4-வது இடத்தைப் பிடித்தது. இந்த 2 தொகுதிகளிலும் தேமுதிக 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஏ.நல்லதுரை 1,192 வாக்குகள் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பாமக வேட்பாளர் ஜி.குஞ்சிதபாதத்துக்கு 794 வாக்குகளே கிடைத்தன. அரவக்குறிச்சியில் பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன் 995 வாக்குகள் பெற்றார். திருப்பரங்குன்றத்தில் பாமக போட்டியிடவில்லை.

அதிமுக பலம் 136 ஆக உயர்வு

3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால், சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 136 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x