

திருவண்ணாமலையில் உள்ள 2 அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதிகளில் வாடர்ன்கள் இல்லா மல் பாதுகாப்பற்ற நிலையில் திறந்திருந்ததை கண்டு ஆய்வுக்கு சென்ற வட்டாட்சியர் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தில் இயங்கி வந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவை உட் கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காப்பகம் மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் வழங்கப் படும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள 2 அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதிகளில் வட்டாட்சியர் சுரேஷ் நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர், 2 விடுதிகளின் கதவுகளை பூட்டு போட்டு பூட்டாமல், வார்டன்கள் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆதிதிராவிடர் நல அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதியில் உள்ள சமையலறை சுத்தம் இல் லாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய வட்டாட்சியர், அடுப்பில் உணவு தயாரிக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கவும், விறகு அடுப்பு பகுதியின் மேற்கூண்டை அடிக்கடி சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மாணவிகளிடம் பட்டியலில் உள்ளதுபடி உணவு வழங்கப்படுகிறதா? உணவு சுவையாக இருக்கிறதா? அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதா? என கேட்டறிந்தார்.
அப்போது மாணவிகள், ‘தங் களுக்கு அடிக்கடி ரவை உப்புமா வழங்கப்படுதாகவும், பிற விடுதிகளில் வழங்குவது போல் இடியாப்பம், சப்பாத்தி மற்றும் வெரைட்டி உணவுகள் வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில், வெளியே காய்கறிகள் வாங்க சென்றதாக கூறியபடி வந்து சேர்ந்த வார்டன் சரஸ்வதி, ‘கழிப்பறை கதவுகள், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
மாணவிகளுக்கு அடிப்படை தேவைக்காக வழங்கப்படும் ரூ.750 (ஓராண்டுக்கு) தொகை வழங்காததால், சோப்பு, பாய், போர்வை உள்ளிட்டவற்றை தங்களது சொந்த செலவில் மாணவிகள் வாங்கி கொண்டுள்ளனர்’ என்றார்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வ மாக மனு கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்தார். மேலும் அவர், மாணவிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அலட்சியமாக உள்ளீர்கள்... இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட நல அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதியில் வட்டாட்சியர் ஆய்வு செய்தபோது, வார்டன் மற்றும் 2 சமையலர்கள் இல்லாமல், சமைய லறையில் தனி நபர் ஒருவர் உணவு தயாரித்து கொண்டிருந்தார்.
பின்னர், மாணவிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதும், 2 சமையலர்கள் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களிடம், விடுதிகள் உள்ள பகுதியானது, பாதுகாப்பற்ற பகுதியாகும். மதுபானம் குடித்துவிட்டு செல்ப வர்கள் அதிகம் உள்ளனர். மாணவிகள் தங்கியுள்ள விடுதியை பூட்டி வைக்காமல் அலட்சியமாக உள்ளீர்கள் என்றார்.
3 வாழைப்பழம் எங்கே?: மேலும் அவர், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டை உள்ளதா? என கேட்டறிந்தார். இதில், 3 முட்டைகள் குறைவாக இருந்தன.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, முட்டை வேண்டாம் என 3 மாணவிகள் கூறியதாகவும், இதற்கு ஈடாக வாழைப்பழம் வழங்கப் படும் என சமையலர்கள் ஜீவா, நாகராணி ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவிகளுக்கு வழங்கப் படவுள்ள வாழைப்பழம் எங்கே? என கேட்டபோது, 3 வாழைப்பழம் இல்லை. மாணவிகளுக்கு பட்டியலில் உள்ளபடி உணவு வழங்க வேண்டும், இதுபோன்று அலட்சியமாக இருந்தால், பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்வேன் என வட்டாட்சியர் சுரேஷ் எச்சரித்தார்.