

தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலில் பண விநியோகத்தின் மூலமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று தெரிவித்த கருத்துகள், வெளியிட்ட அறிக்கைகளின் விவரம்:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின்:
இடைத்தேர்தல் முடிவுகளை ஜனநாயக முறைப்படி ஏற்றுக் கொள்வதுதான் திமுகவின் வழக்கம். எனினும், தற்போதைய 3 தொகுதி தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் அராஜகம், அமைச்சர்களின் முறைகேடுகள், பண விநியோகத்தைக் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்தின் போக்கு ஆகியவற்றால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலிலும் எதிர்காலத்தில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை திமுக பெற்றுள்ள வாக்குகள் காட்டு கின்றன. திமுகவை பொறுத்தவரை தோல்வியைப் பற்றி கவலைப் படாமல் நிச்சயமாக மக்கள் பணியை, ஜனநாயக பணியை தொடர்ந்து ஆற்றும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தேர்தல் ஆணையத்தை துணைக்கு வைத்துக்கொண்டு பண விநியோகம் நடத்திய இரு கட்சிகளில், அதிக பணம் கொடுத்த அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு பதிலாக பணநாயகம் வெற்றி பெறுவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
தேர்தலில் பணப் பட்டுவாடா தடுக்கப்பட்டிருந்தால் பாஜவுக்கு இன்னும் அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதனால்தான் பாஜக துணிச்சலாக களத்தில் இறங்கியது. இது வருங்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக இருக்கும். பலம் பொருந்திய கட்சிகள் மத்தியில் வளர்ந்து வரும் கட்சிக்கு இடமில்லை என்ற நிலையை மாற்ற பாஜக போராடி வருகிறது. இதை மக்களும் உணர்ந்து எதிர்காலத்தில் பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
ஆளும் கட்சிக்கு ஆள் பலமும், பண பலமும் உள்ளதால் 3 தொகுதிகளிலும் அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்று முன்கூட்டியே கூறினோம். அதன்படியே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் தொகுதி மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய வேண்டும்.